மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் கூட ஒரு வகை வாக்கு திருட்டுதான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமரிசனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உண்மையாகவே மகளிர் நலனில் அக்கறை இருந்திருந்தால் ஆட்சிக்கு வந்த பின்னர் முதல் திட்டமாக இதைத்தான் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.
2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, 2023 செப்டம்பர் வரை இரண்டரை ஆண்டுகள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு 2024 மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு 6 மாதங்கள் முன்பாக 17.09.2023ல் இத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் இத் திட்டத்தின்படி உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த திமுக, அதை காற்றில் பறக்கவிட்டு 1.16 கோடி பெண்களுக்கு மட்டுமே உதவித் தொகையை வழங்கியது. மீதமுள்ள 1.25 கோடி பெண்களுக்கு உதவித் தொகை வழங்காமல் திமுக ஏமாற்றியது.
அதனால் மக்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பையும் வெறுப்பையும் சமாளிக்கும் வகையில் மீதமுள்ள மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என கடந்த ஆண்டு மே முதல் கூறிவந்த திமுக அரசு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 16 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்கான திட்டத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை விழா நடத்தி தொடங்கி வைத்திருக்கிறது.
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டமே ஒரு வாக்குத் திருட்டு நடவடிக்கைதான். இந்த நாடகங்களுக்கு எல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி.

Comments are closed.