வக்ஃப் வாரியத் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

வாலாஜா பஜார் மசூதி நிதி முறைகேடு புகார் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ்கனி மீது வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஃபயாஸ் அகமது தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கூறியிருப்பதாவது:

வாலாஜா பஜார் மசூதி நிதி முறைகேடு தொடர்பாக திப்பு என்பவருக்கு எதிராக 15.09.2022 அன்று வக்ஃப் வாரியத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தேன்.


இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக இரு தரப்புக்கும் வக்ஃப் வாரியக் கண்காணிப்பாளர் சம்மன் அனுப்பினார். அதன்படி, விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தமிழக வக்ஃப் வாரியத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி இறுதி உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தமிழக வக்ஃப் வாரியத் தலைவர் நவாஸ் கனி அமல்படுத்தவில்லை. எனவே, அவர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம் மனுவில் வழக்கறிஞர் ஃபயாஸ் அகமது கூறியிருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சுனில்குமார் ராஜேந்திரன், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் வக்ஃப் வாரியத் தலைவர் அதை அமல்படுத்தவில்லை.

மேலும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபருடன் பொதுக்கூட்டத்தில் நவாஸ் கனி பங்கேற்றுள்ளார் எனக் கூறி, புகைப்பட ஆதாரங்களைத் தாக்கல் செய்தார்.

இதையடுத்து, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, இம் மனுவுக்கு நவாஸ் கனி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்.19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Comments are closed.