உ.பி., மாநில பெண்ணுக்கு 2 ஆண்டுகளாக வழங்கப்படும் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை: அதிகாரிகள் அதிர்ச்சி!

கோவை மாவட்டம் கொண்டம்பட்டியைச் சேர்ந்த பெண்ணிற்கான மகளிர் உரிமைத் தொகை, உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்வது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு வாயிலாக தெரிய வந்துள்ளது. இதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைடந்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. வயது 50. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

இதுகுறித்து அவருக்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வராததால், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் ஜுலை 25ஆம் தேதி நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மீண்டும் விண்ணப்பித்தார்.

மனுவை ஆய்வு செய்த அதிகாரிகள் அப் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது எனக் கூறி, ‘வங்கி கணக்கை சரிபாருங்கள்’ என அறிவுறுத்தினர்.

அதனடிப்படையில், மகேஸ்வரி பேங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்தார். அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், ‘உங்கள் ஆதார் எண்ணுடன் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாந்திதேவி என்பவரது வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கிற்கு மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் செல்கிறது’ என்ற தகவலைத் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, இவ் விபரங்களை குறிப்பிட்டு பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் செப்.11ஆம் தேதி மனு அளித்தார்.

அம் மனுவில், வேறு ஒருவரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ள மகளிர் உரிமைத் தொகையை மீட்டு, தனது வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “மகளிர் உரிமைத் தொகை சென்னையில் இருந்து பயனாளர்களின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட பயனாளியின் வங்கி கணக்குக்கு பணம் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என கிணத்துக்கடவு சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பானுமதி தெரிவித்துள்ளார்.

இத் தவறு எங்கு நடைபெற்றுள்ளது, மகேஸ்வரியின் ஆதார் எண்ணுடன் வேறு மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் வங்கி கணக்கு எண் எப்படி இணைக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தால், மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் பட்டியலை சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Comments are closed.