திமுக எம்எல்ஏவின் கார் மோதியதில் ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு நடுத் தெருவைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் (50). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வயலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சையில் இருந்த வந்த திமுக மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு எம்.எல்.ஏ.வுமான துரை.சந்திரசேகரனின் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு ஒரத்தநாடு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் வேறொரு காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இவ்விபத்து குறித்து ஒரத்தநாடு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.