பிரபல பள்ளி அருகே புதரில் வயிற்றில் முட்டைகளுடன் பதுங்கியிருந்த 6 அடி நீள சாரைப் பாம்பை அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் மீட்டனர் .
தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் அடைக்கல மாதா கல்லூரி வளாகத்த்தில் அமைந்துள்ள பள்ளி அருகே புதரில் பாம்பு ஒன்று இருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (செப்.19) கிடைத்த தகவலின்பேரில், EWET என்ற அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையைச் சேர்ந்த வன உயிர் மீட்பாளர் அன்பு மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டபோது புதர்களின் அருகில் சுமார் 6 அடி நீள சாரைப் பாம்பு காணப்பட்டது.

அக்குழுவினர் சாரைப் பாம்பை மீட்டு அலுவலகத்திற்கு கொண்டு வந்து பரிசோதனை செய்ததில், பாம்பின் வயிற்றில் முட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அப் பாம்பு EWET அலுவலக காப்ப பராமரிப்பில் வைக்கப்பட்டது. அன்றைய இரவு 10.15 மணியளவில் மொத்தம் 11 முட்டைகளை அப் பாம்பு ஈன்றது.
“அதன் பின்னர், மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனியின் அறிவுரையின் பேரில், தஞ்சை வனச் சரகர் ஜோதிகுமார் வழிகாட்டுதலின்பேரில், சாரைப் பாம்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மீண்டும் விடப்பட்டது. அதன் முட்டைகள் தற்போது எங்கள் EWET காப்பகத்தில் பராமரிப்பில் உள்ளன,” என்கிறார் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் இயக்குநர் சதீஷ்குமார்.

Comments are closed.