பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இறந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோரையா (Dhoraiya) தொகுதியைச் சேர்ந்த 5 வாக்காளர்கள் வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் வந்து ‘நாங்கள் உயிரோடு இருக்கிறோம்’ எனக்கூறி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.
பிகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. இதில், 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்கள், ஊடுருவல்காரர்கள் உள்ளிட்ட காரணிகளை வைத்து இத் திருத்தம் மேற்கொண்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இறந்துவிட்டதாக காரணம் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட பிகாரின் தொரையா தொகுதியின் கீழ் உள்ள பட்சர் கிராமத்தில் வசிக்கும் மோகன் ஷா, சஞ்சய் யாதவ், ராமரூப் யாதவ், நரேந்திர குமார தாஸ், விஷ்னவார் பிரசாத் ஆகிய 5 வாக்காளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் குமாரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அம் மனுவில், ‘ஐயா, நாங்கள் உயிருடன் இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு பிழை சரி செய்யப்படும். எந்த ஒரு தகுதியுள்ள வாக்காளரின் வாக்குரிமையும் பறிக்கப்படாது என வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் குமார் உறுதி அளித்து அவர்களை வழியனுப்பி வைத்தார்.
முன்னதாக, சாம்ரான் பகுதியில் உள்ள தும்ரி கிராமத்தில் இதேபோல 15 பேர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
அதேபோல, 2018ல் உயிரிழந்த சோனியா சரண் என்பவரும், 2025ல் உயிரிழந்த அவரது மகன் மணித் மணி என்பவரும் வாக்களிக்க தகுதியானவர்கள் எனக்கூறி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

Comments are closed.