கடந்த 2019ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக நடைபெற்ற எந்தத் தேர்தல்களிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத பதிவுபெற்ற ‘லெட்டர் பேட்’ அரசியல் கட்சிளின் பதிவை ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது.
அதனடிப்படையில், திருப்பூர் மாவட்டம் காந்தி நகர் ஏவிபி லே அவுட் 2வது தெரு, கதவு எண்.26 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் என்ற கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுள்ள எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை என தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அக் கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கம் அளிக்க கேட்டு தமிழக தேர்தல் அலுவலரால் விளக்கம் கோரும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனீஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் தங்களது தரப்பு கருத்துகளை நேரில் எடுத்துரைக்க சென்னையில் உள்ள தமிழகத் தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 26ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ நேரில் ஆஜராகிட அக்கட்சியின் தலைமைப் பொருப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை முடிவுற்ற பின்னர், தமிழக தலைமை தேர்தல் அலுவலர் அனுப்பும் அறிக்கையின்பேரில் இந்திய தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என ஆட்சியர் மனீஷ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.