கடமை தவறிய காவல்துறை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையில் இருந்து தவறிவிட்டது என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு திமுக அரசு முறையான பாதுகாப்பு அளித்து நடுநிலையோடு செயல்பட்டிருக்க வேண்டும். இக் கூட்டத்திற்கு பாதுகாப்பு தரப்பட்டதாக தெரியவில்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,

எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதற்கு அதிமுக ஆட்சியில் முழு பாதுகாப்பு அளித்தோம். ஆனால், தற்போது அதிமுக கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு இல்லை.
அரசியலுக்கு அப்பாற்பட்டு பேச வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது.

விஜய் பேசும்போது மின் விளக்கு அணைந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
விஜய் பிரசாரத்தில் இதற்கு முன் எந்த பிரச்சினையும் இல்லை. 4 மாவட்டங்களில் தவெக பிரசாரம் செய்துள்ளது. ஏற்கெனவே நடந்த கூட்டத்தைப் பார்த்து தமிழக அரசும், காவல் துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி எனும் வகையில் காவல்துறை தனது கடமையிலிருந்து தவறி விட்டது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை.

அரசியல் கட்சி கூட்டங்களில் இதுவரை இப்படி உயிர்ப்பலி நிகழ்ந்ததில்லை. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதில் கட்சிகளுக்கு அனுபவம் உண்டு. ஒரு கட்சித் தலைவர், இன்னொரு கட்சியின் தலைவருக்கு அறிவுரை கூறக்கூடாது என்றார் எடப்பாடி பழனிசாமி.

Comments are closed.