ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது: எடப்பாடி பழனிசாமி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதோ மர்மம் இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை சென்னையில் ரௌடிகள் வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகள் சுதந்திரமாக மக்களை வெட்டிச்சாய்க்கும் நிலை நீடிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் முதல் குற்றவாளி இறந்துவிட்டதாக செய்தி வருகிறது. ஏற்கெனவே சரணடைந்த ஒருவரை என்கௌன்;டர் செய்துவிட்டனர். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இருமல் மருந்து தயாரிக்கும் கம்பெனியின் மருந்தை சாப்பிட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் 20 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளனர். ஆனால், திமுக அரசின் சுகாதாரத்துறைக்கு இப்படி ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இருப்பதே தெரியவில்லை. அங்குள்ள காவல்துறை இங்கு வந்து மருந்து கம்பெனியினரை கைது செய்தபின் தான் இந்த அரசுக்கு தெரிகிறது.

ஜாதி பெயரில் தெருக்கள் இருக்கக் கூடாது என்பது நல்லதுதான். ஆனால், கருணாநிதி பெயரை வைக்க முயற்சி செய்கிறீர்கள். இதுதான் தவறு. தன் அப்பா பெயரை வைக்கத்தான் முதல்வர் ஸ்டாலின் இந்த அரசாணை வெளியிட்டு இருக்கிறார். மீண்டும் அதிமுக அரசு அமைந்ததும் இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

Comments are closed.