கடல் மட்டம் உயர்வால் டெல்டா மாவட்டங்களுக்கு ஆபத்து!

கடல் மட்டம் உயர்வதால் தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என தெரியவருகிறது.

இதுகுறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மைய பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:

பனிப் பாறைகள் உருகுவது, புவி வெப்பமாதல் காரணமாக கடலின் நீர் மட்டம் உயரும். கடந்த 1991ஆம் ஆண்டு இருந்த கடல் மட்ட உயரத்தை அடிப்படையாகக் கொண்டு, கடல் மட்டம் உயர்வது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில் பகுதிவாரியாக திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், நம் நாட்டில் ஆண்டுக்கு 3.4 மி.மீ அளவுக்கு கடல் மட்ட உயர்வு இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் 9 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் 69 மாவட்டங்களில் கடல் மட்ட உயர்வு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, ஆண்டுக்கு 3.4 மி.மீ., என கணக்கிட்டால், 2100ஆம் ஆண்டில் 25 செ.மீ., அளவுக்குதான் கடல் மட்ட உயர்வு இருக்கும். கரியமிலவாயு உமிழ் படிப்படியாக அதிகரித்தால், வெப்பநிலை அதிகரித்து, அதன்காரணமாக கடல் மட்ட உயர்வு, 2100ஆம் ஆண்டில் 110 செ.மீ., வரை செல்ல வாய்ப்பு உள்ளது.


தமிழகத்தில், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் கடல் மட்ட உயர்வால் பருவமழைக் காலங்களில் பாதிப்புகள் ஏற்படும்.

இதில் கடல் நீர் ஊருக்குள் வருவதைவிட, நிலப் பகுதியில் இருந்து வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படும். இதனால், தாழ்வான பகுதிகள் தொடர்ந்து பல நாட்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கரியமில வாயு உமிழ்வு அதிகரிப்பதை தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளூர் மக்களின் அர்ப்பணிப்புடன், அவர்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என பேராசிரியர் ராமச்சந்திர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.