உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஐபிஎஸ் அதிகாரி பிரவின் குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு வியாழக்கிழமை நள்ளிரவு கரூர் வந்துள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27 அன்று இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, ஐஜி அஷ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
அக்குழுவினர் கரூர் வந்து விசாரணை மேற்கொண்டது.

இதற்கிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ் வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அக்.13ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் அடங்கிய 6 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் வியாழக்கிழமை இரவு கரூர் வந்தடைந்தனர்.
இக்குழுவினர், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சிபிஐ அதிகாரிகளிடம், சிறப்பு புலனாய்வுக் குழு வசம் உள்ள ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டு, இன்றோ அல்லது நாளையோ விசாரணை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.