மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம்: இபிஎஸ் சூளுரை!

மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூளுரைத்துள்ளார்.

அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதல்வரகள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல, அது ஓர் உணர்வு. தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு பிரச்சினை என்றால், அதற்கான முதல் குரல் கொடுப்பவன் அதிமுக தொண்டன் தான்’ எனக் கூறியுள்ளார்.

“நம் தமிழக மக்களுக்கான குரலாக, நாளை மக்களுக்கான ஆட்சியை அமைக்கப்போகிறோம் என்ற பொறுப்போடு, மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்ற அர்ப்பணிப்போடு, எழுச்சிப் பயணங்களில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் அளித்த உத்வேகத்தோடு, கழகக் கண்மணிகளே – வாருங்கள்!

மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம், தமிழகத்தை மீட்கும் லட்சியத்தோடு, அம்மா கண்ட கனவு நோக்கி பீடுநடை போடுவோம்! நாளை நமதே!” என எடப்பாடி பழனிசாமி அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.