வன்கொடுமை தடுப்பு சட்டம்: ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு!

பட்டியலினத்தைச் சேர்ந்த நபரை அவரது ஜாதிப் பெயரைச் சொல்லி, தகாத வார்த்தைகள் பேசி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியர் உள்ளிட்ட 4 நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 37).
இவர் காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அழைத்ததன்பேரில், நான் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டிருந்த வேலியை அகற்றும் பணியில் எனது நண்பர்களுடன் ஈடுபட்டிருந்தேன்.
அப்போது, மாலை 4.30 மணியளவில், அங்கு வந்த ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ. வாக்கீஸ்வரன், அவரது மகன், தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் சக்தி சரவணன், மகேஸ் ஆகிய நால்வரும் ‘நாங்க வேலைக்கு கூப்பிட்டா வரமாட்ட. உன்னோட ஜாதியைச் சேர்ந்த உதயகுமார் ஊராட்சி மன்றத் தலைவரா இருக்கிற திமிரா’ எனக் கூறி தகாத வார்த்தைகள் கூறி மிரட்டினர்.

 

சக்தி சரவணன்

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 5ஆம் தேதி காலை நான் டீ குடிக்க கடைக்குச் சென்றபோது அங்கே வந்த வாக்கீஸ்வரன், அவரது மகன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சக்தி சரவணன், மகேஸ் ஆகிய நால்வரும் மீண்டும் தகாத வார்த்தைகள் பேசி என்னையும், ஊராட்சி மன்றத் தலைவர்உதயகுமார் ஆகிய இருவரையும் வெட்டிச் சாய்ப்பதாக கொலை மிரட்டல் விடுத்தனர் என தனது புகார் மனுவில் கூறியுள்ளார் கணேஷ்.

அவரது புகாரின்பேரில், தமிழ்ப் பல்கலைக் கழக காவல் நிலைய போலீஸார் பாரதிய நியாய சங்கிதா சட்டப் பிரிவுகள் 296(டி) (தகாத வார்த்தைகள் பேசி திட்டுதல்), 351(3) (கொலை மிரட்டல் விடுத்தல்) மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவகள் 3 (1) (s) (பொதுவெளியில் ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டுவது), 3 (1) (r) (பட்டியலினத்தைச் சேர்ந்தவரை அவமானப்படுத்தி அச்சுறுத்துவது, மற்றும் 3 (2) (va) (பட்டியலினத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக குற்றச்செயலில் ஈடுபடுவது) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைகக் கழக ஊழியர் சக்தி சரவணன், ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்ஐ வாக்கீஸ்வரன் ஆகியோர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Comments are closed.