தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற சுற்றுப் பயணத்தின் ஒருபகுதியாக சென்னை தங்கசாலை தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழக அரசின் வருவாயைக் கூட்ட வேண்டும் என்றே மத்திய அரசு கூறியது. ஆனால், அதைக் காரணம் காட்டி, தமிழக அரசு சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி மக்கள் மீதான சுமையை அதிகரித்துள்ளது. மேலும், மத்திய அரசு கூறிதால்தான் இவற்றை செய்வதாகவும் பாஜக மீது முதல்வர் ஸ்டாலின் வீண் பழி சுமத்துகிறார்.
தமிழகத்தில் 5 வயதாக இருந்தாலும் 70 வயதாக இருந்தாலும் பெண்களால் வெளியே சுதந்திரமாக நடமாட முடியவில்லை. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள் 60 சதவீதமும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளன. அதேபோல், தமிழகத்தில்தான் வயது முதிர்ந்தவர்கள் அதிக அளவில் கொலை செய்யப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதுவரை 24 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதான் வளர்ந்த தமிழ்நாடா? இந்த ஆட்சிக்கு மிக விரைவில் மக்கள் முடிவு கட்டவுள்ளனர் என்றார் நயினார் நாகேந்திரன்.

Comments are closed.