“ஆடிய ஆட்டம் என்ன, பேசிய வார்த்தை என்ன…” என்ற இந்த அற்புதமான பழைய பாடல் வரிகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கனகச்சிதமாக பொருந்தும்.
அதற்கு காரணம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை அடித்துள்ள திடீர் அந்தர் பல்டி.
2024ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததற்கு முழு முதல் காரணம் அப்போதைய பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலையே.
தமிழகத்தில் பாஜக தலைவராக தான் பதவி ஏற்ற பின்னர், கட்சி பெரிய அளவில் வளர்ந்து இருப்பதாகக் கூறி அடிக்கடி கட்சித் தலைமையிடம் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி ‘பில்ட்-அப்’ செய்து வந்தார் அண்ணாமலை.
சாதாரண கிளைக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக வளர்ந்து இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்துள்ள எடப்பாடி பழனிச்சாமியை அவரது அரசியல் அனுபவம் மற்றும் வயதிற்கு உரிய மரியாதை தராமல், அவர் ஒரு முன்னாள் முதல்வர் என்ற மரியாதைகூட இல்லாமல், ‘தவழ்ந்து வந்த பாடி, பாதம் தாங்கி பதவிக்கு வந்த தற்குறி’ என்றெல்லாம் பொதுவெளியில் தொடர்ந்து தரம் தாழ்ந்து ஏளனமாகச் பேசி அவமதித்து வந்தார் அண்ணாமலை.

அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற அநாகரிக செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மேலிடம் எவ்வளவோ அழுத்தம் கொடுத்தும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அதிமுக தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார்.
அத் தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்பதோடு சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பையும் பறித்தது.
அத்தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்டிருந்தால் சுமார் 10-12 தொகுதிகளில் அக்கூட்டணி வேட்பாளர்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்பது தேர்தல் முடிவடைந்த பின்னர் வெளியான அத் தொகுதிகளில் அவ்விரு கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்றிருந்த வாக்குகள் மூலம் தெரிய வந்தது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலின்போது, கூட்டணி தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு, அத் தொகுதியில் பாஜக போட்டியிடும் என முந்திக்கொண்டு அறிவித்ததுடன் அக் கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரையும் மனு தாக்கல் செய்ய வைத்தார் அண்ணாமலை. அதன் பின்னர், பாஜக மேலிடம் தலையிட்டு தக்க அறிவுரை வழங்கிய பின்னர் பாஜக வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதுதான், அதிமுக-பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்படுவதற்கான தொடக்கம்.
இவை அனைத்திற்கும் காரணம், தான் ஒரு மெத்தப் படித்தவன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற அகந்தையே. இதை அடிக்கடி பொதுவெளியிலும் வெளிப்படுத்தி வந்தார் அண்ணாமலை.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேர்தல் வியூக வகுப்பாளர் சந்தோஷ் ஆகியோர் அமர்ந்திருந்த மேடையில் பேசிய அண்ணாமலை, “அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஆக்குவது தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களின் கடமை’ எனப் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அவரது இப் பேச்சுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகி, வைரலாகி வருகிறது.
“கட்சியின் டெல்லி தலைமையிடம் அண்ணாமலை ஏற்படுத்தியிருந்த மாய பிம்பம் மக்களவைத் தேர்தலில் உடைந்ததைத் தொடர்ந்து, அவர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இன்று வரை அவருக்கு வேறு பதவி எதுவும் வழங்கப்படவில்லை,” என்கிறார் அரசியல் விமரிசகரான சவுக்கு சங்கர்.

இதற்கு முன்னர், தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அண்டை மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், அண்ணாமலைக்கு இதுநாள் வரை எந்தவொரு பதவியும் வழங்கப்படவில்லை என சுட்டிக்கட்டுகிறார் சவுக்கு சங்கர்.
அதிமுக-பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்னரும், அமித் ஷா தான் எனக்கு தலைவர். வேறு எவரையும் நான் கூட்டணிக் கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இதுநாள் வரை பொதுவெளியில் முறுக்கிக் கொண்டிருந்த அண்ணாமலை. இடையில், அவர் ‘கொங்கு ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒரு புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்நிலையில், தற்போது ‘அண்ணன் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பாஜக தொண்டர்களின் கடமை’ எனப் பேசியிருப்பதன் மூலம் அவர் எடப்பாடி பழனிசாமியிடம் சரணாகதி அடைந்து விட்டார் என்பதையே காட்டுகிறது என்கிறார் சவுக்கு சங்கர்.

Comments are closed.