2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றிய நர்ஸ்!

2 மாத குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்றை தனது உயிரைப் பணயம் வைத்து தாவிக் குதித்து கடந்து சென்று கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு திரும்பியுள்ளார் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசு ஊழியரான கமலா என்ற நர்ஸ்.

இமாச்சலப்பிரதேசம் மண்டி அருகேயுள்ள சௌகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.

மருத்துவமனை எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இக்கிராம மக்களுக்கு மருத்துவம் பார்க்க பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்ஸ் வரவேண்டும்.
பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் எனில், மலைப்பகுதியில் அமைந்துள்ள அக் கிராமத்திற்கு செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது. இதனால் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டுவிடுமோ என அதன் தாய் அஞ்சினார்.

ஆனால், டிகாரில் பணிபுரிந்து வரும் கமலா என்ற நர்ஸ், அக் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் முடிவு செய்தார். இதையடுத்து, தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணம் மேற்கொண்டு, இடையே முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, தனது உயிரை துச்சமென எண்ணி தாவிக் குதித்து கடந்து சென்று தனது கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு திரும்பியுள்ளார்.


ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தோடு பாய்ந்தோடிய ஆற்றை கடக்க, அதனிடையே இருந்த பாறாங்கற்கள் மீது கமலாவின் கால்கள் துள்ளிக் குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments are closed.