‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் டிஜிபி அலுவலகம் அருகே தாக்கப்பட்ட புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் தேதியன்று டிஜிபி அலுவலக வாசல் அருகே போலீஸார் மற்றும் மீடியாக்கள் முன்னிலையில் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி விசிகவினரால் தாக்கப்பட்டார். ஆனால், இத் தாக்குதலை அங்கிருந்த போலீஸார் தடுத்து நிறுத்தாமல் வெறுமனே வேடிக்கை பார்த்தனர். அதனால், ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, வேறு வழியின்றி, தன்னைத் தாக்கிய விசிகவினர் மீது தற்காப்புக்காக எதிர் தாக்குதல் நடத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.


இதைத் தொடர்ந்து, விசிகவினரை கத்தியால் தாக்கியதாக போலீஸார் ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை 7ஆம் தேதி இரவு கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் ‘ஏர்போர்ட்’ மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அதற்கான ஆவணங்களை மாநகர காவல்துறையினர், சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Comments are closed.