டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்புவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஆர்.காமராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
டெல்டா மாவட்டங்களில் நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதேநேரம், நெல் கொள்முதல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து தவறான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து, அவற்றை சரக்கு ரயில்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கமானது. ஆனால், தஞ்சைக்கு வந்த துணை முதல்வர், நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்ததாகவும், சுமார் 4000 மெட்ரிக் டன் நெல் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன. இதில் 4000 மெட்ரிக் டன் என்பது சொற்பமே. ஏறத்தாழ டெல்டா முழுவதும் 35 சதவீதத்துக்கும் மேல் குறுவை சாகுபடி நெற்பயிர்கள் அறுவடை செய்யப்படாமல் தொடர் மழையால் நெல்மணிகள் முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குக்கு எடுத்துச் செல்வதுடன், தேங்கிக் கிடக்கும் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்தால்தான், அடுத்ததாக அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய முடியும்.
எனவே அரசு விரைந்து செயல்பட்டு, 17 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படா முளைவிட்ட நெல் மூட்டைகளையும் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் நடவு செய்த நெற்பயிர்கள் மழை நீரில் சேதமடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அரசு உடனடியாக அனுப்பி, ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அசை;சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.