துப்பாக்கி ஏந்திய காவலர் வேடத்தில் விநாயகர்!

காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் இளைஞர்கள் காவல் நிலையம்போல வடிவமைத்து, அதில் விநாயகரே ஏட்டையா வடிவத்தில் அமர்ந்து இருப்பதுபோல வித்தியாசமான முறையில் சிலைகள் அமைத்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.

தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியில் காவல் நிலையம் போன்று தத்ரூபமாக சுற்றுச்சுவர், ஆர்ச், பெயர்ப் பலகை உள்ளிட்டவையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் முகப்பில் துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்பதுபோல விநாயகர் வேடத்தில் இரண்டு காவலர் சிலைகள் உள்ளன.

அதன் உள்ளே சென்று பார்த்தால், விநாயகரே ஒரு ஏட்டையா (ரைட்டர்) போல, அங்கு வரும் மக்களிடம் புகாரைப் பெறுவதுபோல, கையில் பேனா மற்றும் நோட்டுடன் அமர்ந்துள்ளார்.

மேலும், இக் காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் சிறைச்சாலை அமைத்து அதில் சுண்டெலியை கைதியாக்கி வைத்துள்ளனர்.

விநாயகரிடம் இருந்த லட்டை திருடியதால் சுண்டெலி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததாக தெரிவிக்கின்றனர்.

Comments are closed.