எனக்கே தெரியாமல் எனது வீட்டில் 9 போலி வாக்காளர்கள் : பெண் புகார்

கடந்த மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தேர்தல் ஆணைய உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக சில நாள்களுக்கு முன் குற்றஞ்சாட்டிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேட நடைபெற்றதாக சில ஆதாரங்களை வெளியிட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதேநேரம், ராகுல் காந்தி வெளியிட்ட தரவுகள் தவறானவை எனத் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பூங்குன்னம் பகுதியில் வசித்துவரும் பிரசன்னா என்ற பெண் தனக்கே தெரியாமல் தனது வீட்டில் 9 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.

பிளாட் எண்.4C, கேபிடல் அபார்ட்மெண்ட் என்ற முகவரியில் வசித்துவருகிறார் பிரசன்னா. இந்நிலையில், இதே முகவரியில் அவருடன் 9 பேர் குடியிருந்து வருகின்றனர் எனக்கூறி வாக்காளர் சரிபார்ப்பு பணிக்காக அண்மையில் ஊழியர்கள் பிரசன்னாவின் வீட்டிற்கு வந்துள்ளனர்.

இம் முகவரியில் பிரசன்னா மட்டுமே தனித்து வசித்துவரும் நிலையில், அதே வீட்டில் வசித்துவரும் ஏனைய 9 பேரின் பெயர் உள்ளிட்ட விபரங்களைக் கேட்டுள்ளனர் வாக்காளர் சரிபார்ப்பு ஊழியர்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் பிரசன்னா.

அவரது வீட்டு முகவரியில் அவருக்கே தெரியாமல் முறைகேடாக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பது அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது.

“என் குடும்பத்தில் நான்கு பெரியவர்கள், 2 குழந்தைகள் உள்ளனர். எஞ்சிய முதியவர்கள் சொந்த கிராமமான பூச்சினிபாடம் என்ற ஊரில் வசித்து வருகின்றனர். அங்குதான் அவர்களுக்கு ஓட்டு உள்ளது.

வாக்காளர் விவரங்களை சரிபார்க்க ஊழியர்கள் வந்தபோதுதான் என் வீட்டு முகவரியைப் பயன்படுத்தி 9 பெயர்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. எனது பெயருடன் இதே முகவரியில் 10 ஓட்டுகள் உள்ளன. ஆனால் அந்த 9 பேரும் யாரெனத் தெரியவில்லை” என பிரசன்னா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Comments are closed.