உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?: 32 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை.யில் பணி நியமன முறைகேடு புகார் தொடர்பாக நடைபெற்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஒரு நபர் குழு விசாரணை முடிவில் அளித்த அறிக்கையின் அடிப்படையில், ‘உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?’ என விளக்கம் கேட்டு முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 32 பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு புதன்கிழமை மாலை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2017-18ஆம் ஆண்டில் ஜி.பாஸ்கரன் என்பவர் துணை வேந்தராக பணியாற்றியபோது, பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் என 40 பேர் நியமிக்கப்பட்டனர்.

துணை வேந்தர் ஜி.பாஸ்கரன்

இந் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியில்லாத 32 பேர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், துணை வேந்தராக நியமிக்கப்பட்ட திருவள்ளுவன், குற்றச்சாட்டுக்குள்ளான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களின் தகுதிகாண் பருவம் முடிந்த நிலையில், அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்த துணை வேந்தர் திருவள்ளுவன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

மேலும், இம் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை குழுவை அமைத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் குழு இம் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 32 பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யுமாறு பரிந்துரைத்து தமிழக ஆளுநரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

மேலும், செப்டம்பர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆட்சிக்குழுப் பேரவையில்; இவ்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட தகுதியற்ற ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக பதிவாளருக்கு தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் அக்.22ல் அனுப்பிய கடிதத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஆட்சிக்குழு பேரவையில் தீர்மானத்தின்படி 60 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, முறைகேடாக பணிநியமனம் செய்யப்பட்ட தகுதியற்ற பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் என 32 நபர்களுக்கு ‘உங்களை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது?’ என விளக்கம் கேட்டு, அதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் அளிக்குமாறு கூறி, புதன்கிழமை மாலை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed.