தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் அடுத்த மாதம் இறுதி விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார். இத் தேர்தலில், ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகை;கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக சைதை துரைசாமி தனது மனுவில் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இவ் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என கடந்த 2017ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இத் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இம் மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
மேலும், ஜனவரி 22ஆம் தேதிவரை இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்த நீதிபதிகள், அதற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Comments are closed.