குடும்பத் தகராறு காரணமாக மனம் வெறுத்து தற்கொல செய்துகொள்ள 80 அடி ஆழ கிணற்றுக்குள் குதித்த பெண் மற்றும் அவரைக் காப்பாற்ற முயன்ற தீயணைப்பு வீரர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கேரள மாநிலம் நெடுவத்தூரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண், நள்ளிரவு கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்த கோட்டாரக்கரை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று அப் பெண்ணை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சிவகிருஷ்ணன் என்பவரும் கிணற்றுக்குள் குதித்து அப் பெண்ணைத் தேடியுள்ளார்.
அவ்விருவரையும் காப்பாற்ற தீயணைப்புத்துறை வீரர் சோனி குமார் கிணற்றுக்குள் சென்றுள்ளார். இந் நிலையில் அம்மூவரும் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அம்மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர்.
குடும்பத் தகராறு காரணமாக அப் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.