சிறுமி வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து: உடனே விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை போரூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு போரூரை அடுத்துள்ள மதநந்தபுரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் மாயமானார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர், சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த என்ற இளைஞர் அச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தஷ்வந்த கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுமி கொலை வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்துச் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து, அப்போது ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், தனது தாய் சரளாவை கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செய்துவிட்டு தப்பினார். மும்பையில் பதுங்கியிருந்த அவரை தனிப்படை போலீஸார் அங்கே சென்று கைது செய்தனர்.

சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் மரண தண்டனை விதித்து கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தார்.
இத் தீர்ப்பை எதிர்த்து தஷ்யந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.விமலா மற்றும் எஸ்.ராமதிலகம் ஆகியோர் அடங்கிய அமர்வு தஷ்வந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், தாயைக் கொன்ற வழக்கில், தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தஷ்வந்த் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றத்தை நிரூபிக்கத் தவறிவிட்டதாகவும், வீடியோ கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.