திட்டமிட்டபடி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுமா?

தீண்டாமைக்கான வசை சொல்லாக, ‘காலனி’ என்ற சொல் இருப்பதால், அரசு ஆவணங்களில் இருந்து நீக்கப்படவுள்ளது. அத்துடன், சாலைகள், தெருக்கள் பெயர்களில் உள்ள ஜாதி பெயர்களும் நீக்கப்படும் என தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்க உள்ளார். இப் பாலத்திற்கு, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளால் பெருமை சேர்த்த ‘இந்தியாவின் எடிசன்’ எனப்படும் ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று மேம்பாலம் திறக்கப்பட உள்ளது.
இதற்கு முன்னதாக, அரசு சொத்துக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, திட்டமிட்டபடி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்படுமா அல்லது பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜி.டி.நாயுடு

இந்நிலையில், தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜாதி பெயர்களை நீக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், கோவையில் மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு எனப் பெயர் சூட்டுகிறது. இந்த முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திராவிட மாடல். அரசு இரட்டை வேடம் போடுகிறது.

முதலில், கோவை அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் ‘ஜி.டி.நாயுடு’ பெயரை மாற்றுங்கள். அதேபோல், ஜாதியற்ற சமுதாயம் படைக்க அமைச்சர்கள், அவரவர் சார்ந்த ஜாதி சங்க விழாக்கள், கூட்டங்கள், மாநாடுகளுக்கு செல்வதற்கு முதல்வர் தடை விதிக்க வேண்டும் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.