கரூர் சம்பவம்: சிகிச்சையில் இருந்த அனைவரும் வீடு திரும்பினர்!

தவெக பிரசார கூட்ட நெரிசிலில் சிக்கி காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருததுவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசிலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 106 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். அவர்களில் அக்.3ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஒரு நபரும் குணமடைந்த நிலையில் சனிக்கிழமை (அக்.4) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனவே,  கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி விட்டனர்.

ஆனால், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேரும் என மொத்தம் 4 பேர் மட்டும் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.