6ஆம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு: அத்தை கைது!

குடும்பத் தகராறில் 13 வயதேயான, 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை அரிவாளால் வெட்டிய அத்தையை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜாமணி. இவரது மனைவி லட்சுமி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அவர்களில், 2 மகள்கள், மகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

கடைசி மகள் கவிஸ்ரீ (13) கும்பகோணம் மாநகராடசிப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், காலாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால், சிறுமி கவிஸ்ரீ வீட்டில் இருந்துள்ளார்.

ராஜாமணியின் தங்கை செந்தாமரை தனது அண்ணன் வீட்டிற்கு வெள்ளிக்கிழமை வந்தார். சனிக்கிழமை காலை ராஜாமணி வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், சிறுமி கவிஸ்ரீ; அவரது அத்தை செந்தாமரை ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது, செந்தாமரை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சிறுமி கவிஸ்ரீயின் முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்ட செந்தாமர அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்த தகவலின்பேரில், கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறுமியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அச் சிறுமியின் அத்தை செந்தாமரையை கைது செய்தனர்.

Comments are closed.