விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத கரூர் மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகிய இருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப் போவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு அறிவித்துள்ளது.
கரூரில் செப்.27 இரவு தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து விசாரிக்க ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்று முன் தினம் கரூருக்கு வந்து, சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியது.
மேலும், இச்சம்பவம் குறித்து விளக்கமளிக்க கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரையும் பல வழிகளில் தொடர்பு கொண்டபோது அவ்விருவரும் விசாரணை குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அவ்விருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படும் என பெங்களுரு எம்.பி. தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். பல வழிகளில் அவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தும் எங்களை சந்திக்க மறுத்து விட்டனர்” எனக் குற்றஞ்சாட்டினார்.
“எனவே எங்கள் குழுவில் இருக்கும் 8 எம்.பி.க்களும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்துள்ளோம்.
நாடாளுமன்ற குழுவைச் சந்திக்க கரூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் மறுத்ததால், அவ்விருவர் மீதும் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர எங்கள் எம்.பி.க்கள் குழு முடிவு செய்துள்ளோம்,” என்றார் தேஜஸ்வி யாதவ்.

Comments are closed.