சென்னையை அடுத்த நீலாங்கரையில் இளைஞர் ஒருவர், அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் மீறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய்-யின் வீட்டிற்குள் நேற்று மாலை நுழைந்த அந்த இளைஞர் மொட்டை மாடிக்குச் சென்று அமர்ந்து கொண்டிருந்தார். அதைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அதிர்ச்சியடைந்து, அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது. விஜய்யை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்ததாக தெரிய வந்துள்ளது.
ஆனால், அவர் எப்படி இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி விஜய்யின் வீட்டிற்குள் நுழைந்தார் என்பது தெரியவில்லை. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.