சென்னை வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்த 5 வயது ஆண் சிங்கம் திடீரென காணவில்லை. மாயமான ‘ஷெரியார்’ என்ற அச் சிங்கத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா நிர்வாம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில் 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் ‘லயன் சஃபாரியில்’ பராமரிக்கப்படுகின்றன. இது பார்வையாளர்களுக்கு இயற்கையான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு பெங்களுரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் ‘ஷெரியார்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இச் சிங்கம் சஃபாரி பகுதிக்குள் தொடர்ந்து விடப்பட்டு வருகிறது. இந் நிலையில், அச் சிங்கம் அக்.3ஆம் தேதி இரவு அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை.
இதனால், ஷெரியாரை தேடும் பணியில் பூங்கா நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மீட்புக் குழுக்கள் வனப்பகுதிக்குள் சிங்கத்தைக் கண்டுள்ளனர். மேலும், கள ஊழியர்களால் கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது சஃபாரி பகுதிக்குள்தான் சிங்கம் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இதுபோன்ற இளம் சிங்கங்கள் இயற்கையாகவே, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் சுற்றுச் சூழலை அலைந்து திரிந்து ஆராய்வது இயற்கையான ஒன்றுதான். முந்தைய காலங்களில் இதுபோன்று சென்ற சிங்கங்கள் 2 அல்லது 3 நாள்களுக்குள் தங்களது தங்குமிடங்களுக்கு பாதுகாப்பாகத் திரும்பின என அச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.