காங்., எம்எல்ஏ மீது பிரபல நடிகைகள் பாலியல் புகார்!

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் (Rahul Mamkootathil) மீது பிரபல மலையாள நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டுக்குள்ளான ராகுல் மம்கூடத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர், தனக்கு ஆபாசமாகவும் எல்லை மீறியும் மெசேஜ் செய்ததாக மலையாள நடிகையும் முன்னணி பத்திரிகையாளருமான ரினி ஆன் ஜார்ஜ் (Rini Ann George) குற்றஞ்சாட்டினார். மேலும், அந்த அரசியல் பிரமுகர் தன்னை ஓட்டலுக்கு அழைத்ததாகவும், இது தொடர்பா அவரது கட்சியின் தலைமைக்கு சொல்லி விடுவேன் என மிரட்டியபோதும், அலட்சியமாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், அந்த அரசியல் பிரமுகர் சேர்ந்த கட்சியின் பிரபல தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களும் இதேபோன்ற தொந்தரவுகளை எதிர்கொண்டதாக தெரியவருவதாக கூறினார் ரினி ஜார்ஜ்.

“சொந்த குடும்ப பெண்களை பாதுகாக்கத் தவறிய இந்த அரசியல்வாதிகள், பிற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு வழங்க முடியும்? இதேபோன்ற தொல்லைகளை பல பெண்கள் எதிர்கொண்டதை நான் பார்த்தேன். அவர்கள் இதுகுறித்து பேசாத நிலையில், அவர்களுக்காக சேர்த்தும் நான் குரல் கொடுத்துள்ளேன்,” என ரினி ஜார்ஜ் கூறியுள்ளார்.
ஆனால், அந்த அரசியல் பிரமுகர் யார், எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறித்த எந்தவொரு தகவலையும் அவர் வெளியிடவில்லை.

இதைத் தொடர்ந்து, மற்றொரு நடிகையான ஹனி பாஸ்கரன் (Honey Bhaskaran) காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல பெண்கள் புகார் அளித்தும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார் ஹனி பாஸ்கரன்.

இதனிடையே, பாலக்காட்டில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ-வும், அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூடத்தில் பதவி விலக வேண்டும் எனக்கோரி அவரது அலுவலகத்தை நோக்கி பாஜ பேரணி நடத்தியது.

இதுவரை காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு புகாரை மட்டுமே பெற்றுள்ளதாகவும், யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீஷன் தெரிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில் இளைஞரணி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

சினிமா நடிகைகளுக்கு திரையுலகில் பாலியல் தொந்தரவு இருப்பதாக வெளியான புகார்கள் ஏற்கெனவே கேரளாவை உலுக்கிய நிலையில், இப்போது அரசியல் பிரமுகரும் இதில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.