ஆசிட் வீசி கணவன் கொலை: மனைவிக்கு ஆயுள் தண்டனை!

வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் கணவர் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கோவை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. வயது 72. ஓய்வுபெற்ற நில அளவையர். இவரது மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு கமலக்கண்ணன் (44) என்ற மகனும், ஹேமா தங்கேஷ்வரி(27) என்ற மகளும் உள்ளனர்.

கமலக்கண்ணன் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்.

கணேசமூர்த்தி, ஜோதிமணி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், தந்தையின் எதிர்ப்பையும் மீறி, ஹேமா தங்கேஷ்வர் கடந்த 2021ஆம் ஆண்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இதனால், கணேசமூர்த்திக்கும் அவரது மனைவிக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல், அவர் வீட்டில் சாப்பிடாமல் உணவகத்தில் சாப்;பிட்டு வந்துள்ளார். மேலும் அவர் குடும்பச் செலவுக்கும் பணம் தரவில்லை. இதனால் அவரிடம் ஜோதிமணி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசமூர்த்தி மீது ஜோதிமணி ஆசிட் வீசியதுடன், வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

பலத்த காயங்களுடன் அலறித் துடித்த கணேசமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் 06.08.2021 அன்று பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக, செல்வபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜோதிமணியை கைது செய்தனர்.

இவ் வழக்கு கோவை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.கே.சிவகுமார், குற்றஞ்சாட்டப்பட்ட ஜோதிமணிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Comments are closed.