தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. அதன்படி, சிஆர்பிஎஃப் வீரர்கள் 11 பேர் 24 மணிநேரமும் விஜய்யின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மீறி, சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள விஜய் வீட்டிற்குள், சில தினங்களுக்கு முன், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த அருண் (24) என்ற மனநலம் பாதித்த இளைஞர் புகுந்தார். இது விஜய் வீட்டில் பாதுகாப்பு குளறுபடி இருப்பதை அம்பலப்படுத்தியது.
இந்நிலையில், செப்.27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரத்தின்போது விஜய் மீது செருப்பு வீசப்பட்டதாக வீடியோ வெளியாகி உள்ளது. இக் கூட்டத்திலும் பாதுகாப்பு குளறுபடிகள் இருந்துள்ளன.
தொடர்ந்து விஜய்க்கான பாதுகாப்பு பணிகளில் குளறுபடிகள் நீடிப்பதால் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிஆர்பிஎஃப் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிஆர்பிஎஃப் வீரர்களிடம், தில்லியில் இருந்து சென்னை வந்த உள்துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

Comments are closed.