சட்டவிரோத அனுமதி வழங்க ரூ.100 கோடி லஞ்சம்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் குடியிருப்புகள் கட்ட சட்டவிரோத அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், சென்னை பள்ளிக்கரணையில் தனியார் நிறுவனம் எந்தவித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அங்கு ரூ.2000 கோடி அளவில் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி வழங்கியது குறித்து மிகப் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது என்றார்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டடம் கட்ட சுற்றுச்சூழல், வனத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எப்படி அனுமதி வழங்கின என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எடப்பாடியார் கடுமையாக கேள்வி எழுப்பி வருகிறார்.

2022ஆம் ஆண்டில் சென்னை பிச்சாவரம், பள்ளிக்கரணை ஆகிய காடுகள் ராம்சார் அங்கீகாரம் பெற்றன. தற்போது 1247 ஹெக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நிலங்களுக்கு ராம்சார் அங்கீகாரம் பெற்ற நிலையில், எந்த கட்டுமான பணியும் மேற்கொள்ளக் கூடாது. அனுமதி வழங்கக் கூடாது.

ஆனால், ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலப் பகுதிகளில் 1250 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி ஆகும்.

குடியிருப்பு கட்டுமான திட்டங்களுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதில் ரூ.100 கோடி அளவில் லஞ்சம் கைமாறியுள்ளதாக சொல்லப்படுகிறது என உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Comments are closed.