போலீஸாரின் நிபந்தனைகளை ஏற்க தவெக மறுப்பு!

திருச்சியில் செப்டம்பர் 13ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-யின் பிரசார சுற்றுப்பயணம் தொடர்பாக போலீஸார் விதித்துள்ள நிபரந்தனைகளை ஏற்க தவெக.வினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் தனது பிரசார பயணத்தை துவங்க திட்டமிட்டுள்ளார். செப்.13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சிக்கு வரும் விஜய், முதலில் டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக வந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகில் பேசுவார் என தவெக தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய் திருச்சி மரக்கடை பகுதியில் பிரசார பயணத்தை துவங்கி பேசுவதற்கு போலீஸார் அனுமதி அளித்துள்ளனர். ஆனால், ‘ரோட் ஷோ’ நடத்த அனுமதி இல்லை. பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் விஜய் பிரசார வாகனத்தின் வெளியே வரக்கூடாது எனவும் போலீஸார் நிபந்தனை விதித்துள்ளனர்.

காவல்துறையினரின் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஏற்க தவெக.வினர் மறுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments are closed.