குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா?

இந்தியா கூட்டணி (India Bloc) சார்பாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும் திமுக மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027 ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை இருந்த நிலையில், சற்றும் எதிர்பாராதவிதமாக உடல்நலத்தைக் காரணம் காட்டி அவர் ஜுலை 21ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்; பதிவு நடைபெறும் என்றும், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமாறு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.