திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக அவமதிப்பு வழக்கு விசாரணையை, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், நீதிமன்றம் உத்தரவிட்டும், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் திமுக அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார்.
இவ் வழக்கு இன்று காலை 10.45 மணிக்கு மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இதனால், வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமிநாதன், வழக்கு விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனவும் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Comments are closed.