ஆற்காடு அருகேயுள்ள சாத்தூர் கிராமத்தில் நேற்று (செப்.3) நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் தனது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு ஒன்றியம் முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார்.
அவரது மனு மீது இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற ‘உங்களுடன் முதல்வர்’ முகாமிற்கு சென்ற திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தனது மனு மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டுள்ளார். மேலும், தனது மனுவை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கும்படியும் கோரியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அதிகாரியும், அம் முகாமில் கலந்து கொண்ட ஏனைய அதிகாரிகளும் அம் முதியவரை தாக்கியுள்ளனர். அதன் பின்னரும், அம் முதியவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லாததால், இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், அங்கே வந்த காவல் உதவி ஆய்வாளர் அம் முதியவரை முகத்திலும் நெஞ்சிலும் பலமாகக் குத்தி கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூகவலைத் தளங்களில் வெளியாகி வைரலானது.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமது மனு மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பிய முதியவரை கிராம நிர்வாக அலுவலரும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத்தன்மையற்ற இச் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
மனு கொடுக்க வந்த முதியவரை தாக்கியதை மன்னிக்கவே முடியாது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு, மக்கள் மறக்காத பாடத்தை புகட்டுவார்கள் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.