வாக்குரிமையை எவ்வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எவ் வகையிலும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1020 கோடி செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,44,469 பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி. வடக்கே காசி என்றால், தெற்கே தென்காசி. தென்காசி கோயில் குடமுழுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது.

இப்போது தேர்தல் ஆணையம் மூலமாக ‘வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்’ மூலமாக நமது வாக்குரிமையைப் பறிக்கும் சக்தியை அறிவித்திருக்கிறார்கள்.
பிகாரில் என்ன நடந்தது என்று பார்த்தோம். பாஜகவுக்கு தோல்வி உறுதியானதால்; வாக்காளர்களை நீக்கத் துணிந்தார்கள். தமிழ்நாட்டிலும் இதை செய்யப் பார்க்கிறார்கள். தொடக்கம் முதலே இதை எதிர்த்து வருகிறோம். இதில் கேரளமும் நம்மோடு இணைந்துள்ளது.

இது தொடர்பாக நவம்பர் 2ஆம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடக்கவிருக்கிறது. ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான். அதை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம். வாக்குத் திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் காப்போம். அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு இதில் பங்கேற்க வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

Comments are closed.