கரூரில் தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் காலதாமதமாக வந்ததே காரணம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்.27ஆம் தேதியில் தவெக பிரசாரம் செய்ய அனுமதிகோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும், பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி அளிக்கப்படவில்லை.
செப்.25ல் லைட்ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை பகுதியில் அனுமதி கோரியபோதும், பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை. வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மனு அளித்தார். அவரது மனு ஏற்கப்பட்டு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
கரூர் நிகழ்ச்சிக்கு காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள் உள்பட 517 காவல்துறையினர் கரூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுமட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்து ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப் படை காவலர்கள் என 91 பேர் வரவழைக்கப்பட்டு, அன்றைய நாளில் அதிகாரிகள், காவல்துறையினர் என மொத்தம் 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வழக்கமாக, அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் காவல்துறை பாதுகாப்பைவிட அதிக அளவில்தான் வழங்கப்பட்டிருந்தது. 10,000 பேர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கும் அதிகமானோர்தான் வருவர் என கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
கூட்டம் நடத்த அனுமதிகோரிய கடிதத்தில், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், செய்தியாளர் சந்திப்பு, சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு அக்கட்சித் தலைவர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார்.
இதனால், காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர். நாமக்கல்லில் இருந்து இரவு 7 மணிக்கு அக்கட்சித் தலைவர் வந்தார். அதாவது அறிவிக்கப்பட்ட 12 மணி கடந்து, 7 மணிநேரம் கழித்துதான் வந்தார். இக் காலதாமதம், கூட்ட நெரிசலுக்கு காரணமாக அமைந்தது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Comments are closed.