கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகளுடன் மீண்டும் திமுக ஆட்சி: ஸ்டாலின்

கடந்த தேர்தலைவிட வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ என்ற தலைப்பில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையப் பாதுகாக்கும் உயரிய நோக்குடன் பசி, உறக்கம், குடும்பம் ஆகியவற்றைத் துறந்து எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்…. வாழ்த்துகள்.

நாம் இவ்வளவு கடினப்பட்டு இருந்தாலும் பாதி கிணறுதான் கடந்துள்ளோம். வேரிஃபிகேஷன் பணிகள் நிறைவடைந்து நமது மக்களின் பெயர்கள் விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் வந்தால்தான் முழு கிணற்றையும் கடந்ததாக கருத முடியும்.

எஸ்ஐஆர் பணிகள் வாக்குரிமையைப் பாதுகாக்கும் அடிப்படைப் பணியாக இருந்தால், ‘என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி’ என்பது நமது வெற்றியை உறுதிப்படுத்தும் தேர்தல் பணியாகும்.

எனவே, நாம் அனைவரும் களத்தில் மிகுந்த தீவிரத்துடன் பணியாற்ற வேண்டும். உங்கள் ஆற்றலுக்கும் உழைப்புக்கும் முன் எவராலும் நிற்க முடியாது. எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை அணிகள் செயல்பட்டாலும், தமிழ்நாட்டை மீண்டும் ஆளப்போவது உதயசூரியன்தான். உங்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இதை கூறவில்லை. இதுதான் உண்மை.

நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 86 லட்சம் மக்கள் நேரடியாக பயனடைந்து வருகின்றனர். இதில் பயனாளிகளுடன் சேர்த்து, கழகத்தினரையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

முந்தைய ஆட்சிக்காலங்களில் மழை பெய்தாலே உதவிக்காக காத்திருந்த நிலையும், நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கும் முறையும் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை மக்களுக்கு களத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும். நமது சிறப்பான பணிகளைப் பார்;த்து நடுநிலை வாக்காளர்களும் இன்று நமக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

மொத்தமாக, பயனாளிகள் – கழக்த்தினர் – நடுநிலை வாக்காளர்கள் என சேர்த்தால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகளைத் தாண்டுவது சாத்தியமே.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணி பெற்ற வாக்குகள் 2 கோடியே 9 லட்சம் வாக்குகள் தான். இம் முறை, அதைவிட கூடுதலாக அதிக வாக்குகளைப் பெறுவது உறுதி. இப் புள்ளி விவரங்களை முன்வைத்து உங்கள் களப்பணியின் மீது உள்ள நம்பிக்கையோடு தெளிவாகக் கூறுகிறேன் – நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments are closed.