கள்ளக் காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயற்சி: சப்-இன்ஸ்பெக்டர் கைது!

கள்ளக் காதலியை கிணற்றில் தள்ளி கொல்ல முயன்ற குற்றச்சாட்டின்பேரில், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெடர் ராஜாராம் என்பவரை அதியமான்கோட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (28). இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு காரணமாக கோமதி, தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அவருடைய கணவர் அடிக்கடி அங்கு சென்று தகராறு செய்து வந்தததைத் தொடர்ந்து, இது தொடர்பாக புகார் கொடுக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் கோமதி.

அப்போது அங்கு பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், பாப்பாரபட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். அதோடு, அங்கு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் (54) என்பவரை தொடர்பு கொண்டால் அவர் உதவி செய்வார் என்றும் கூறியுள்ளார்.

அதன்படி, கோமதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமை அணுகி உள்ளார். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியது.
இதையடுத்து, கோமதியை தர்மபுரியை அடுத்துள்ள ஒட்டப்பட்டி காமராஜ் நகரில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து, அங்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம். இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்துள்ளனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததைத் தொடர்;ந்து, கோமதியை சந்திப்பதை கடந்த சில மாதங்களாக தவிர்த்து வந்துள்ளார் ராஜாராம். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜாராம் கோமதியை தொடர்பு கொண்டு தங்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதால் அதற்கு தீர்வு காண ஜோதிடம் பார்க்கலாம் எனக் கூறி, கோமதியின் ஜாதகத்தை சில தினங்களுக்கு முன் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, ஜாதகத்தில் பிரச்சனை இருப்பதால், இரவு நேரத்தில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து சாமி பாதத்தில் ஊற்றி பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, தடங்கம் அருகே பெருமாள் கோவில் மேட்டிற்கு கோமதியை நேற்று முன் தினம் இரவு வரவழைத்து, பரிகார பூஜை செய்ய அப்பகுதியில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

குடத்தில் கயிறு கட்டி, கிணற்றில் கோமதி கிணற்றில்  தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தபோது, அவரை கிணற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார் ராஜாராம். கிணற்றில் தத்தளித்த கோமதியின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை கிணற்றில் இருந்து மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி தகவலறிந்த அதியமான்கோட்டை போலீஸார் கோமதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கோமதி வாக்குமூலம் அளித்தார். அதன் பின்னர், கோமதி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமை கைது செய்தனர்.

Comments are closed.