ஜெயலலிதா இருந்திருந்தால் செங்கோட்டையனுக்கு எம்எல்ஏ பதவியே கிடைத்திருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ” தன்னை ஜெயலலிதா விசுவாசி என்கிறார் செங்கோட்டையன். அப்படியெனில், அமைச்சர் பதவியிலிருந்து ஏன் செங்கோட்டையனை நீக்கினார்? நான் முதல்வாரன பின்னரே, செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவியும் மாவட்டச் செயலாளர் பதவியும் கொடுத்தேன். ஜெயலலிதா இருந்திருந்தால் எம்எல்ஏ பதவி கூட கொடுத்திருக்க மாட்டார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக விவசாய அமைப்பினர் விழா நடத்தினர். அது கட்சி சார்பற்ற விழாவாக நடந்தது. அதில் நான் கலந்து கொண்டேன். செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் பங்கேற்கவில்லை என்றார் செங்கோட்டையன். ஆனால், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாத இலவச சைக்கிள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்றார். அப்போதிருந்தே ‘பி டீம்’ வேலையை செங்கோட்டையன் துவக்கி விட்டார்.
சட்டசபையில் திமுகவை எதிர்த்து செங்கோட்டையன் பேசியதே இல்லை. அவர் திமுகவின் பி-டீம் ஆக இருப்பது நிரூபணமானது. இதை யாரும் மறைக்க முடியாது. அதனால்தான் அவர் நீக்கப்பட்டவுடன் கோபிச்செட்டிபாளையம் தொகுதி நகர, ஒன்றிய செயலர்கள் இனிப்பு கொடுத்து கொண்டாடுகின்றனர்.
அவர் 53 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்து இருக்கிறார் என்றால், மக்களுக்கு, கட்சியனருக்கு உழைத்திருக்க வேண்டும். மாறாக, இயக்கத்துக்கு துரோகம் செய்தால், இந் நிலைமை தான் ஏற்படும். இரண்டு கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்துக்கு எதிராக பேசுபவர்களை சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
செங்கோட்டையனுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறேன் என தினகரன் சொல்கிறார். நீக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்திருக்கிறார் செங்கோட்டையன். இப்படி தலைமைக்கு விரோதமாக செயல்பட்டால், வேடிக்கை பார்க்க முடியாது.
முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததோடு திமுகதான் ஆட்சிக்கு வரும் என பன்னீர் செல்வம் பேட்டி கொடுக்கிறார். இவரை எப்படி கட்சியில் இணைக்க முடியும்?
இவர்கள் எல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருவதற்காக இணைக்க சொல்லவில்லை. திமுகவை ஆட்சியில் அமர்த்த மறைமுகமாக திட்டமிடுகின்றனர். வரும் சட்டசபை தேர்தலில் திமுகவின் பி-டீம் ஆக செயல்படுவதுதான் இவர்களின் திட்டம். கோபிசெட்டிபாளையம் பகுதியில் செங்கோட்டையன் ஒரு சிற்றரசர் போல நடந்து கொண்டிருந்தார் ” என்றார் எடப்பாடி பழனிசாமி.

Comments are closed.