‘கெடு’ விதித்த செங்கோட்டையன் அதிரடி நீக்கம்!

அதிமுகவின் பொதுச் செயலாளருக்கு 10 நாள் ‘கெடு’ விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கை மூலம், கட்சித் தலைமைக்கு எதிராக செயல்பட்டு கட்சிக்குள் குழப்பம் விளைவித்து, பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் சுயநலவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என அக்கட்சியில் இருந்து அவ்வப்போது கலகக்குரல் எழுவது வழக்கம். அதில் லேட்டஸ்டாக குரல் எழுப்பியவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

அவ்வப்போது, சட்டப்பேரவையிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்த செங்கோட்டையன், நேற்று (செப்.5) செய்தியாளர்களைச் சந்தித்து, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்நிலையில், திண்டுக்கல்லில் தனியார் ஓட்டலில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் ஆகியோருடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்ட முடிவில், செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.