உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரணை: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு விசாரணை நடத்தியதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் போலீஸ் ஐஜி அஷ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில், எதிர்மனுதாரராக சேர்க்கப்படாத நிலையில் தவெக தலைவர் விஜய் குறித்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெளியிட்ட கருத்துகளையும் நீக்கக்கோரி, தவெக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதோடு, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரணை நடத்தியது குறித்து பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது.

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தவெக எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக எப்படி உத்தரவு பிறப்பித்தது? தலைமை நீதிபதியின் அனுமதியின்றி, மதுரையில் நடைபெறும் வழக்கை, சென்னையில் உள்ள தனி நீதிபதி அமர்வு விசாரிக்க எந்த தேவையும் இல்லை. ரிட் குற்ற வழக்காக எப்படி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டீர்கள்? இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீமன்றம் தெரிவித்துள்ளது.

Comments are closed.