வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு ‘குட் நியூஸ்’

வீட்டு வாடகை சட்டம் 2025-ன் படி வாடகைக்கு குடியேறுவோர் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இச் சட்டத்தில், வாடகைக்கு குடியிருப்போர், வீட்டு உரிமையாளர்கள் என இரு தரப்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் அம்சங்கள் உள்ளன.

அதன்படி, இனி 2 மாத வாடகையை முன்பணமாக கொடுத்தால் போதுமானது. வீட்டு வாடகை ஒப்பந்தங்களை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

சில முக்கிய அம்சங்கள்:

வீட்டை வாடகைக்கு விட்டால் அந்த ஒப்பந்தத்தை உரிமையாளர் பதிவு செய்திருக்க வேண்டும். முன்பு சாதாரண ஒப்பந்த பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டால் போதுமானதாக இருந்தது. ஆனால், புதிய சட்டத்தின்படி, 2 மாதங்களுக்குள் வாடகை ஒப்பந்தத்தை பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், ரூ.5,000வரை அபராதம் விதிக்கப்படும்.

ஆதார் அடிப்படையில் மின்னணு சரிபார்ப்பு முறையில் ஒப்பந்தங்களை பதிவு செய்ய வேண்டும். கைப்பட எழுதி கையெழுத்திடக் கூடாது.

2 மாத வாடகைக்கு மேல் முன்பணமாக கேட்கக்கூடாது. வணிக கட்டடங்களுக்கு 6 மாத வாடகைளை முன்பணமாக வசூலிக்கலாம்.

ஒருவர் வாடகைக்கு வந்தபிறகு 12 மாதங்கள் கழித்துதான் வாடகையை உயர்த்த வேண்டும். அவ்வாறு உயர்த்துவதற்கும் 2 மாதங்கள் முன்பே நோட்டீஸ் மூலம் வாடகைதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

வாடகைக்கு இருக்கும் வீட்டில் பழுது ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களே 30 நாள்களுக்குள் சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், வாடகைதாரர்களே அதை சரிசெய்து கொண்டு, வாடகை தொகையில் கழித்துக் கொள்ளலாம்.

வாடகைக்கு இருக்கும் வீட்டை சரிபார்க்க, உரிமையாளர் நினைத்தபோதெல்லாம் நுழைய முடியாது. 24 மணி நேரத்துக்கு முன்னதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

வாடகைக்கு இருப்போரை காரணமின்றி காலி செய்ய வலியுறுத்தக் கூடாது. வாடகை செலுத்தாமல் இருத்தல், சேதம் ஏற்படுத்துதல் என குறிப்பிட்ட காரணங்கள் இல்லாமல் காலி செய்ய வற்புறுத்தக்கூடாது.

Comments are closed.