தரங்கம்பாடி அருகே ரேஷன் கடையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் விற்பனை உதவியாளர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் புஞ்சை கிராமத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரேஷன் கடையில் சித்ரா (40) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். சித்ரா தனக்கு உதவியாக புஞ்சை கிராமத்தைச் சேர்ந்த சௌரிராஜன் (62) என்பவரை நியமித்துள்ளார்.
இன்று ரேஷன் கடை திறக்கப்பட்டு வழக்கம்போல பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, மேற்கூரை கான்க்ரீட் பெயர்ந்து விழுந்தது. இவ்விபத்தில், பொருள்களை எடுத்து கொடுத்துக் கொண்டிருந்த உதவியாளர் சௌரிராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, விற்பனையாளர் சித்ரா மற்றும் அருகில் இருந்தவர்கள் சௌரிராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து தகவலறிந்த தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் அனிதா மற்றும் செம்பனார் கோவில் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

Comments are closed.