முன்னாள் திமுக அமைச்சர் ஆலங்குடி சுப்பiயாவின் சமாதி சமாதி அமைந்துள்ள இடத்தை இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின்கீழ் வேறொரு நபருக்கு பட்டா வழங்கி அப்பகுதி திமுகவினர்க்கு அதிர்ச்சி அளித்துள்ளனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கரும்பிரான்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பையா. இவர் 1967 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர், 1969ல் கருணாநிதி தமிழக முதல்வராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, ஆலங்குடி சுப்பையா தமிழக அறநிலையத்துறை, வீட்டுவசதி மற்றும் இடவசதி கட்டுப்பாடு துறைகளுக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இருமுறை ஆலங்குடி எம்.எல்.ஏ-வாக இருந்துள்ள சுப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக 1976-ல் இறந்தார். அவரது உடல் அவரது சொந்த ஊரான கரும்பிரான்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அருகில் புறம்போக்கு இடத்தில் புதைக்கப்பட்டு, சமாதி கட்டப்பட்டது.
காலப்போக்கில் இச் சமாதி சிதிலமடைந்தது. இதைச் சீரமைக்க சில நாள்களுக்கு முன், சுப்பையாவின் குடும்பத்தினர் சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த ஒருவர், சமாதி உள்ள இடத்தில், தனக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வீட்டுமனை பட்டா வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பையாவின் குடும்பத்தினர் இதுகுறித்து புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆலங்குடி வட்டாட்சியர் வில்லியம் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சரின் சமாதி உள்ள இடத்திற்கு வேறொரு நபருக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி இருப்பதை அறிந்து அப்பகுதி திமுகவனிர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.