பேரணியில் பைக்கை பறிகொடுத்த இளைஞர்: புதிய பைக் வாங்கிக் கொடுத்த ராகுல்!

பிகாரில் நடைபெற்ற வாக்குரிமைப் பேரணியில் பங்கேற்ற இளைஞர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பாதுகாப்பு படையினரிடம் பறிகொடுத்த நிலையில், அவருக்கு புதிய பைக் ஒன்றை பரிசளித்துள்ளார் ராகுல் காந்தி.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பிகாரில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள சசாரமில் இருந்து காங்கிரஸின் வாக்குரிமைப் பேரணியைத்  தொடங்கினார்.

14 நாட்களில் மொத்தம் 1300 கி.மீ. கடந்த இப்பேரணி பிகார் தலைநகர் பாட்னாவில் செப்டம்பர் 1ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இப்பேரணி தர்பங்கா மாவட்டத்தில் சென்றபோது கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடியது.

அப்போது அங்கிருந்த தாபா (ஓட்டல்) அருகில் பாதுகாப்பு ஏற்படுத்த பாதுகாப்பு பணியாளர்கள், அங்கே கூடடியிருந்தவர்களின் பைக்குகளை வாங்கியுள்ளனர். அதில் தாபா உரிமையாளரான சுபத் என்பவரின் BR 07 AL 5606 என்ற பதிவெண் கொண்ட ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள பல்சர் 220 பைக்கும் மாயமானது.

பாதுகாப்பு பணியாளர்கள் முதலில் தாபாவுக்கு வந்து தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால், சிறிது நேரம் கழித்து பாதுகாப்புக்காக பைக் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். பேரணி 1.5 கி.மீ. தொலைவுக்கு இருக்கும். பின்னர், உங்களது பைக்கை திருப்பி தந்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.


“அவர்கள் என்னை பைக்கில் அழைத்துச் சென்றனர். ஒரு ஸ்கார்பியோ காரில் என்னை உட்கார வைத்திருந்தனர். ஆனால், பேரணி முடிந்ததும் அவர்களையும் என்னுடைய பைக்கையும் எங்கு தேடியும் காணவில்லை,” என்றார் சுபத்.

இதுகுறித்து, சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியான நிலையில், ராகுல் காந்தியின் உத்தரவின்பேரில், சுபத்துக்கு காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் ஆகஸ்ட் 31ஆம் தேதி அழைப்பு விடுத்தார்.

தனது பைக் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சுபத்துக்கு, வாக்குரிமைப் பேரணியின் நிறைவு நாளான செப்டம்பர் 1ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் புதிய பல்சர் 220 பைக்கையும், அதற்கான சாவியையும் ஒப்படைத்தார். இதனால் சுபத் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

பைக்கை பறிகொடுத்தவர்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதிய பைக் வாங்கி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.