‘நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீங்க’ என தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்தை புதுசை காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங் கடுமையாக எச்சரித்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் இன்னும் சற்று நேரத்தில் தவெக பொதுக்கூட்டம் தொடங்கவுள்ளது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளார்.
தவெகவின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பிறகு நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் என்பதால், காவல்துறையினர் நிபந்தனைகளை விதித்து, உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது, 5000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
க்யூஆர் கோட் உள்ள அனுமதிச் சீட்டு உள்ளவர்களை மட்டுமே காவல்துறையினர் திடலுக்குள் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், க்யூஆர் கோட் அனுமதிச் சீட்டு இல்லாத தொண்டர்கள் சிலரை அனுதிக்கக்கோரி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்பி ஈஷா சிங்கிடம் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
இதனால் கோபமடைந்த எஸ்.பி. ஈஷா சிங், “நான் என்ன செய்ய வேண்டும் என எனக்கு நீங்கள் சொல்லித் தராதீர்கள். உங்களால் பலர் இறந்துள்ளனர்” என ஆக்ரோஷமாக பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

Comments are closed.